Hot Posts

6/recent/ticker-posts

வேளாண்மை

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் உணவு சாராப் பொருட்களுக்காக பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி, நீர் வேளாண்மை, மீன் வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். நிலையான இடத்தில் வாழ்ந்த மனித நாகரிகத்தின் எழுச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக வேளாண்மை இருந்துள்ளது. நகரங்களில் மக்கள்

வாழ்வதற்குக் காரணமான உணவு நுகர்வோன்மிகையை உருவாக்கிய கொல்லைப்படுத்தப்பட்ட உயிரினங்களின் வேளாண்மையானது இந்த நாகரிகங்களில் நடைபெற்றது. மனிதர்கள் குறைந்தது 1,05,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தானியங்களைச் சேகரிக்கத் தொடங்கி விட்ட அதே நேரத்தில், தொடக்க கால விவசாயிகள் 11,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்கில் தான் இவற்றைப் பயிரிடத் தொடங்கினர். செம்மறியாடு, ஆடுகள், பன்றிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லைப்படுத்தப்பட்டன. உலகின் குறைந்தது 11 பகுதிகளிலாவது தாவரங்கள் சுயேச்சையாக அறுவடை செய்யப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டில் பெரும் அளவிலான ஓரினப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை விவசாயமானது விவசாய உற்பத்தி மீது தாக்கம் செலுத்தி வருகிறது.

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக உணவில் சுமார் மூன்றில் ஒரு பங்கை சிறிய விவசாய நிலங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆனால், பெரிய விவசாய நிலங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. உலகின் பெரிய 1% விவசாய நிலங்களானவை 50 எக்டேர்கள் (120 ஏக்கர்கள்) அளவை விடப் பெரியவையாக உள்ளன. உலகின் விவசாய நிலத்தில் 70%க்கும் மேற்பட்ட நிலத்தை இவை கொண்டுள்ளன. விவசாய நிலத்தில் கிட்டத் தட்ட 40%மானது 1,000 எக்டேர்கள் (2,500 ஏக்கர்கள்) அளவை விடப் பெரிய விவசாய நிலங்களில் காணப்படுகிறது. எனினும், உலகின் ஒவ்வொரு ஆறு விவசாய நிலங்களில் ஐந்து 2 எக்டேர்கள் (4.9 ஏக்கர்கள்) அளவுக்கும் குறைவான நிலப் பரப்பைக் கொண்டுள்ளது. அனைத்து விவசாய நிலத்திலும் சுமார் வெறும் 12%ஐ மட்டுமே இவை கொண்டுள்ளன. கிராமப் புற பொருளாதாரம், கிராமப் புற சமூகத்தின் வடிவம் ஆகியவற்றின் மீது விவசாய நிலங்களும், வேளாண்மையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாய நிலங்கள் மற்றும் வேளாண்மை மக்களுக்கு ஆதரவு அளிக்கிற நேரடியான விவசாயப் பணியாளர்கள் மற்றும் பரந்த விவசாயத் தொழிற்துறை ஆகிய இருவற்றின் மீதும் தாக்கத்தைக் கொண்டுள்ளன.

முதன்மையான விவசாயப் பொருட்களானவை உணவுகள், இழைகள், எரிமங்கள் மற்றும் மூலப்பொருட்கள் (இயற்கை மீள்மம் போன்றவை) எனப் பரவலாகப் பிரிக்கப்படலாம். உணவு வகுப்புகளில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய்கள், இறைச்சி, பால், முட்டைகள் மற்றும் பூஞ்சை ஆகியவை உள்ளடங்கியுள்ளன. உலக விவசாய உற்பத்தியானது தோராயமாக 11 பில்லியன் டன்கள் உணவு, 32 மில்லியன் டன்கள் இயற்கை இழைகள் மற்றும் 4 பில்லியன் கன மீட்டர் மரக் கட்டைகளுக்குச் சமமானதாக உள்ளது. எனினும், உலகின் உணவில் சுமார் 14%ஆனது சில்லறை வணிகத்தை அடைவதற்கு முன்னதாக, உற்பத்தி செய்யப்படும் போதே அழிந்து விடுகிறது.

நவீன உழவியல், தாவர வளர்ப்பு, மற்றும் தீங்குயிர்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற வேளாண் வேதிப்பொருட்கள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை பயிர் மகசூலைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன. ஆனால், சுற்றுச் சூழலியல் மற்றும் சூழ்நிலை சேதத்திற்கும் கூட பங்களித்துள்ளன. கால்நடை வளர்ப்பில் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் மற்றும் நவீன முறைகளானவை மாமிச உற்பத்தியை இதே போல அதிகரித்துள்ளன. ஆனால், விலங்கு நலன் மற்றும் சூழ்நிலை சேதம் குறித்த கவலைகளையும் உருவாக்கியுள்ளன. காலநிலை மாற்றத்திற்கான பங்களிப்புகள், நிலத்தடி நீர்ப் படுகைகள் குன்றுதல், காடழிப்பு, நோய்த் தொற்று மருந்துகளுக்கான எதிர்ப்பு மற்றும் பிற விவசாய மாசுபாடுகள் உள்ளிட்டவை சூழ்நிலைப் பிரச்சினைகளாக உள்ளன. உயிரினப் பல் வகைமை இழப்பு, பாலைவனமாதல், மண் சிதைவாக்கம், மற்றும் புவி சூடாதல் போன்ற சூழ்நிலைச் சிதைவுக்கு ஒரு காரணம், அதனால் பாதிக்கப்படுதல் ஆகிய இரண்டாகவுமே வேளாண்மை உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் பயிர் உற்பத்தி குன்றுவதற்குக் காரணமாக அமையலாம். சில நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களைத் தடை செய்திருந்தாலும் இவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பெயர் வரலாறு

வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியவற்றைக் குறிக்கும். நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர். வேளாண்மை என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற agriculture என்னும் ஆங்கிலச் சொல் agricultūra என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. ager என்பது "நிலம்" என்றும், "cultura" என்பது "பண்படுத்தல்" என்றும் பொருள்தரும். எனவே, "நிலத்தைப் பண்படுத்தும்" செயல்பாடு "agricultūra" ("agriculture") என்று அழைக்கப்படலாயிற்று. மேலும், "cultura" என்னும் சொல்லே "பண்பாடு" என்னும் செம்மைப் பொருளை ஏற்றது. அதைத் தொடர்ந்து, "cult" என்னும் சொல் "வழிபாடு" என்னும் பொருளிலும், உள்ளத்தைப் பண்படுத்தல் "கல்வி" என்னும் பொருளிலும் வழங்கலாயிற்று. தமிழில் "கல்வி" என்பது "அகழ்தல்" என்னும் பொருள் தருவதையும் இவண் கருதலாம். இவ்வாறு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழில் மனித இனத்தின் உயர்நிலைச் செயல்பாடுகளை உணர்த்துகின்ற காரணி ஆயிற்று.

வேளாண்மை என்பது பொதுவாக மனித நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறது. எறும்பு, கறையான் மற்றும் அம்ப்ரோசியா வண்டுகளில் சில உயிரினங்கள் 6 கோடி ஆண்டுகளாகப் பயிர்களை அறுவடை செய்து வருகின்றன. வேளாண்மை என்பது வேறுபட்ட கருது பொருள்களில் விளக்கப்படுகிறது. "வாழ்வைப் பேணுவதற்காக உணவு, இழை, காட்டுப் பொருட்கள், தோட்டக்கலைப் பயிர்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் அது தொடர்பான சேவைகள் ஆகியவற்றுக்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது" என்பது வேளாண்மை என்பதற்கான பரவலான விளக்கமாகும். கால்நடை சாராத வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வேளாண்மை இவ்வாறாக உள்ளது. ஆனால், தோட்டக்கலை மற்றும் காட்டியல் பணிகளானவை நடைமுறையில் வேளாண்மையிலிருந்து ஒதுக்கப்படுகின்றன. இதைப் பரவலாக பயன்படுத்தக்கூடிய தாவரங்களை அறுவடை செய்யும் தாவர வேளாண்மை மற்றும் விவசாய விலங்குகளை உற்பத்தி செய்யும் விலங்கு வேளாண்மை எனப் பிரிக்கலாம்.

வரலாறு

3000 ஆண்டுகளுக்கு முன் சுமேரியர்கள் பயன்படுத்திய அரிவாள்

விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. விவசாய முன்னேற்றம் மனித நாகரிகத்தில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். வேளாண்மையே மற்ற எல்லா கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.

வேளாண் தொழில் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையானது. இது பல்வேறு காலகட்டங்களில் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன, ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் மாறுதலை நிகழ்த்தின.


Post a Comment

0 Comments