இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது


 இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான் பகுதியில் 65 பேர்ச் காணியை ஒரு கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்து 6 இலட்சம் ரூபா முத்திரைத் தொகை செலுத்தியதன் பின்னர், அதன் மதிப்பீட்டுப் பெறுமதி இரண்டு கோடியே 65 இலட்சம் ரூபா என மாகாண இறைவரித் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.

இதன்படி, அபராதக் கட்டணத்துடன் அரசாங்கக் கட்டணமாக 850,000 ரூபா செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த தொகையை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைப்பதற்கு இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணம் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தில் வைத்து பெற்றுக்கொள்ளும் போது மேற்படி பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

Post a Comment

0 Comments