வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் ‘டானா’ புயலாக மாறியுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இந்தியாவின் ஒடிசாவிற்கு தென் கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று நள்ளிரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘டானா’ புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் ஆய்வு மேற்கொண்டார்.
0 Comments